என் அருமை பாரதத்திருநாடே என்றுதான் உன்னிடம் ஒற்றுமை காண்பேனோ !
இந்தியா எனும் ஒரு பெயரில் எத்தனை எத்தனை வேறுபாடு, நான் பிறந்த என் தாய் நாடு இதில் ஏன் பிரிந்து கிடக்கும் இரண்டு தனி நாடு. ராஜ்ஜியம் ஆளும் வடநாடு, அதன் மானம் காக்கும் தென்நாடு. இருந்தும், சொல்லாத பனிப்போர் உண்டு நம்மோடு அதை மறந்து நட்பு கொள்வது எப்போது?
மதம் அதனிடம் நாம் கொண்ட பற்று, மானிடம் அதை மறந்திட செய்யும். ஜாதி அதன் பாசம் மதத்தையும் மீறி பல உயிர் இழப்புக்கள் செய்யும். காதல் அது நம் நாட்டின் பாரம்பரியம், நம் ஜாதிக்குள் உள்ளவரையில் நிச்சயம் வெல்லும், ஜாதி கடந்த காதல் நாம் பிறந்த வீட்டின் நிம்மதி கொல்லும். அதையே மதம் தாண்டி செய்தால் போதும் ஒரு மதத்தின் பெருமை சொல்ல போர்கள் வெடிக்கும். போர்க்களம் அதில் அந்த உண்மை காதல் மட்டும் வழியின்றி தத்தளிக்கும்.
நம் வீட்டுக்குள் பட்டினி படர்ந்திருந்தால் என்ன, பக்கத்து வீட்டாரின் பட்டு கவசத்தின் கறை போதும் நம் நாள் நகர. நம் பிறந்த வீட்டின் பாசம் அதை விட நம் கணவன் வீட்டாரின் குறைகள் போதும் நாம் சண்டையிட.
ஹரித்துவார், ரிஷிகேஷ், வேளாங்கன்னி, ஜம்மா மஷ்ஜித், காசி, ராமேஷ்வரம் மற்றும் உன் தெருவோரம் கூட இருக்கும் திருத்தளம் நீ போய் பக்தி முத்தமிட, இருந்தால் என்ன அயோத்தி ஒன்று போதும் நாம் சண்டையிட!
தலித்துகள், பிராமணர்கள், வன்னியர், பிள்ளை, நாடார், தேவர், கவுண்டர், நாயிடு என்று குடும்பத்திற்கு ஒன்றென உள்ளது கோடி ஜாதிகள், அதன் ஒவ்வொரு உட்பிரிவும் நம் நாட்டின் நீங்காத வியாதிகள். மதம் எனும் போர்வையில் புற்று நோய் இருந்தால், ஜாதி எனும் பெயரில் உயிர் கொல்லிகள். போதும் போதும் எனும் போதனை இட்டோரும் கூட ஜாதி சண்டை பயிற்சி முகாமில் தேரியவர் போலும்.
எத்தனை எத்தனை சண்டைகள் இத்திருநாட்டில் இருந்தும் ஒற்றுமை காண்கிறேன் சில காலத்தில்,
கார்கில் போரில் மாய்த்த 1000 வீரர் உயிர், அப்போதுதான் தெரிந்து கொண்டேன் மொத்தம் எத்தனை மாநிலம் இந்தியாவில் உள்ளதென்று , அத்தனை உள்ளமும் ஒன்றாய் சொல்லிட கண்டேன் ஒரு நாடு தழுவிய வெற்றி நமக்கென்று.
கடல் அது கொந்தளித்து ஆயிரம் ஆயிரம் உயிர் குடித்த சுனாமிக்கு உதவி கரம் நீட்டும் போதும் நம்முடையா ஒற்றுமை புலப்படும்.
குஜராத் பூகம்பத்தில் 30000 உயிர் பலி கண்டவுடன், 200 கோடி கண்களில் கண்ணீர் காட்டாறு. அப்போதும் கண்டேன் அங்கே கருணையில் ஒரு ஒருமைப்பாடு.
இதை எல்லாம் சிந்திக்கும் போது ஒன்று புலப்படுகிறது.
நாம் நம் ஒற்றுமை காட்டிட பல உயிர்களை பலியிட வேண்டியுள்ளது.
நம் நாட்டில் என்றும் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றால் போர்கள் இருக்க வேண்டும் அல்லது பூகம்பம் இருக்கவேண்டும். குறைந்தது 1000 இந்தியர்களாவது உயிர் விட வேண்டும்.
ஒரு முறை கூறுங்கள் நீங்கள் என்றும் நிரந்தரமாக ஒற்றுமை காட்டிட எத்தனை உயிர்களை கேட்கிறீர்கள்.அதனோடு என்னுயுரையும் சேருங்கள்!!!
அன்புடன்
அனுஷாதாசன்.